தமிழே வாழ்க! தாயே வாழ்க!
அமிழ்தே வாழ்க! அன்பே வாழ்க!
கமழக் கமழக் கனிந்த கனியே
அமைந்த வாழ்வின் அழகே வாழ்க!
தமிழே ஆதித் தாயே வாழ்க!
தமிழர்க் கெல்லம் உயிரே வாழ்க!
தமிழ் நாட்டுக்கும் பிற நாட்டுக்கும்
அமிழ்தாய் அமைந்த அம்மா வாழ்க!

இளைஞர் இலக்கியம்: பாரதிதாசன்

சிகாகோ தமிழ்ச் சங்கம் 1969- ல் இருந்து சிகாகோ பெருநகரில் வாழ்ந்து, வளர்ந்து வரும் தமிழ் மக்களுக்கு பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் உதவிக் கரங்களாக இருந்து வருகிறது. சங்கத்தை அமைத்த முன்னோக்குடையார்களும், சலிப்பின்றி உழைக்கும் உள்ளார்வத் தொண்டர்களும், தொடர்ந்து உற்சாகத்தை அளிக்கும் உறுப்பினர்களும்தான் இச்சங்கத்தின் வெற்றிக்கு வித்துக்களாவர். வித்துக்கள்தாம் ஏனெனில் இது மேலும், மேலும் வளர்ந்து மிகப்பெரும், முது பெரும் தருவாக வளரவிருக்கின்றது.

தமிழ் உறவுகளுக்கு சங்கத்து உறுதி மொழி:

இன்றமைந்தது இன்றே தீர்ந்தது வென நில்லாது நாளை என்ற சமுதாயம் தமிழ்ச்சமுதாயம் தமிழோடு வாழ வழிவகுக்கும் வகை காண ஆவன செய்யும்

அறிவுசார்புடைய வளமான விழிப்பான வழிகாட்டியென உலகெலாம் வாழ் தமிழினம் வாழ்ந்திட இடுக்கண் களைந்து தமிழுறவு வளர்ந்திட ஆவன செய்யும்

புலம்பெயர்ந்தாலும் தடம் புரளாமல் தவறாது தமிழ் மொழி இனம் பண்பாடு காத்திடலின் அவசியத்தை சிகாகோ பெருநகரிலும் நிலைநாட்டல் வேண்டி ஆவன செய்யும்!

"யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்றிட்ட சந்தத்தமிழ் சிந்திடாமல் சிதறிடாமல் காத்திட, வந்தமைந்த சொந்தங்கள் தந்திட்டத் சிகாகோ தமிழ்ச்சங்கமின்று அமைத்திட்ட சீரான இணையத்தளம் நோக்கி, நீவீர் சீரடி வைத்திடவே, "எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு!" என்றும்மை வேண்டி எந்நாளும் வாழ்த்தி வரவேற்கின்றோம்